குழந்தையுடன் காத்திருந்த வேட்பாளரின் கணவர் - அடைக்கலம் கொடுத்த போலீசார்
திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய அதிமுக பெண் வேட்பாளர் ஒருவர் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்வதற்காக, தனது குழந்தையை கணவரிடம் விட்டுச்சென்றார். கொட்டும் மழையில் மனைவியின் வெற்றிக்காக குழந்தையுடன் காத்திருந்த கணவருக்கு போலீசார் அடைக்கலம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை, மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பிருந்தே வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் குடும்பத்தினரும் குவிந்திருந்தனர். வெற்றி பெற்ற வேட்பாளர்களை அவரது ஆதரவாளர்களும் குடும்பத்தினரும் அள்ளித் தூக்கி மாலை அணிவித்து கொண்டாடினர்.
இந்த நிலையில், கூட்டத்தில் 6 மாத கைக்குழந்தையுடன் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு முன்பு காத்திருந்த நபரொருவர் திடீரென மழை பெய்ய தொடங்கியதால் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள காவல் துறையின் பாதுகாப்பு கூடாரத்திற்கு ஓடிவந்தார். கையில் குழந்தையுடன் மழையில் நனைந்தபடி இங்கு வரவேண்டுமா ? என காவல்துறையினர் கேள்வி எழுப்ப, அவர் தனது மனைவி ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிடுவதாகவும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருப்பதாகவும் குழந்தை அழுவதால் அவரை பார்க்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்வதற்கான அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என கூறிய காவல்துறையினர், பச்சிளம் குழந்தை என்பதால் குழந்தையின் தாயாரை அழைத்து வருவதற்காக, பெண் காவலர் ஒருவர் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குச் சென்றார். சிறிது நேரத்தில் குழந்தையின் தாய் அங்கு விரைந்து வந்தார். திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் 5-ஆவது வார்டு ஒன்றியக் கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றியுடன் திரும்பிய அந்த பெண் அதிமுக வேட்பாளரான அபிராமி.
குழந்தையை கையில் எடுத்துக் கொஞ்சிய தாயிடம், இது போன்ற இடங்களுக்கு கைகுழந்தையை தூக்கி வருவது நோய்பரவலுக்கு வழிவகுக்கும் என்று போலீசார் அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.
Comments